29.5.09

பெருமிதம்????

"பொருளாதார தன்னிறைவு பெற்றோம்"
தொலைக்காட்சியில் அமைச்சர் உரை.....
"அம்மா தாயே சோறு போடும்மா"
வாசலில் பிச்சைக்காரர்.....

22.5.09

சாதிக்கப் பிறந்தேன்...

ஆறாத வடுவாய்
நேற்றைய தோல்விகள்...
முட்களாய் குத்தும்
உறவுகளின் இழிப்பேச்சுகள் ...
முயற்சியின் முட்டுக்கட்டையாக
தோல்வியின் அவமானம்....
ரணங்களை வார்க்கிறேன்
வார்த்தைகளாக...
மலர்ந்தது,
கவிதை மட்டுமல்ல...
தன்னம்பிக்கையும் தான்...
நம்பிக்கையால்
தகர்த்தெறியப்பட்டது
முட்டுக்கட்டைகள்...
இதில் வெளிப்பட்டது
விடாமுயற்சி...
முயற்சியின் பலன்தான்
இன்றைய சாதனை...
இது,
என் கவிதையின் வெற்றி...
கேட்டேன் அதன்,
வெற்றியின் ரகசியத்தை...
என் கவிதை சொன்னது,
" நான் சாதிக்க பிறந்தேன்" என்று...

20.5.09

வழி சொல்லுங்கள்...


வீட்டில் நான் போட்ட
சட்டத்தை மாற்றினாள் ....
பொறுத்துக் கொண்டேன்...
என் உடைமைகளை
அபகரித்தாள் ....
அமைதி காத்தேன் ....
கோபம் கொண்ட
போதெல்லாம் அடித்தாள்....
தாங்கிக் கொண்டேன்.....
அவள் தவறிழைத்த போதெல்லாம்
'அவள் உன்னை மாதிரி' என
அனைவரும் என்னை
வசை பாடினார்கள்
வாங்கிக் கொண்டேன்...

என் கட்டுப்பாட்டில்
இருந்த வீட்டை
அவள் கட்டுப்பாட்டிற்கு
மாற்றினாள்...
மன்னித்து விட்டேன் ....
என் பொறுமைக்கெல்லாம்
முற்றுப் புள்ளி வைக்கும் விதம்,
இன்று என்னையே அடக்கி,
"அத்தை!!! இனி நான் சொல்றத கேளு"
என்கிறாள் என் அண்ணன் மகள்.
அவள் ஆட்டத்தை அடக்க,
என் வீட்டாட்சியை மீட்க
வழி சொல்லுங்கள்...

18.5.09

பிரிவுகள் தாராயோ !!!

உப்பில்லை, உறைபில்லை என்று
அம்மாவின் சமையலை
குறை கூறாத
நாளில்லை...
விடுதியில் சாப்பிடும்பொழுது தான்
அம்மாவின் சமையலை
ருசிக்க நா ஊறுகின்றது.
அப்பாவிடம் சண்டை போட்டு
பணம் வாங்கிய மகிழ்ச்சியுடன்
'நானும் சம்பாதித்து செலவழிப்பேன்'
என்ற சபதமும் இருக்கும்.
நிறைவேறியது சபதம்
மட்டும் தான்.
அந்த மகிழ்ச்சி மட்டும்
எங்கு போனதோ
புரியவில்லை.
அக்காவுக்கு தெரியாமல்
அவள் பட்டு பாவடையை
அணிந்த போது
கிடைத்த ஆனந்தம்
அவள் திருமணத்திற்கு பின்,
அதே பாவாடையைக் காட்டி
இனி இதெல்லாம் உனக்கு தான்
என்று அம்மா சொன்ன போது
கிடைக்கவில்லை.
அண்ணனுடன் போட்டி போட்டு
சாப்பிட்ட அப்பளத்தின் ருசி
அண்ணன் வெளிநாடு
போன பிறகு
தனியாக எத்த்னை
அப்பளம் சாப்பிட்டாலும்
கிடைக்கவில்லை
விடுதிக்கு சென்ற போது தான்
அம்மாவின் அன்பு புரிந்தது...
வேலைக்கு சென்ற போது தான்
அப்பாவின் பாசம் புரிந்தது...
அக்காவின் திருமணத்திற்கு பின்பு தான்
அவளுடனான இணக்கம் புரிந்தது...
அண்ணன் வெளிநாடு போன பின்பு தான்
அவனுடனான நட்பு புரிந்தது...
இறைவா!!!
என் உறவுகளின்
இனிமை புரிய
தக்க தருணத்தில்
பிரிவுகள் தாராயோ!!!

15.5.09

மூளைக்கு வேலை !!!


14.5.09

துப்பாக்கி தேவை

காதலனின் தடாலடி
நீ சொன்னாய் என்பதற்காகத்தான்
உனது அப்பாவிடம் பேசிப்
பார்க்கலாம் என்ற முடிவுக்கு
வந்தேன். ' அலுவலகத்தில்
இருக்கிறேன், நீல்கிரீஸில்
சாயங்காலம் சந்திக்கலாம்' என
உன் தகப்பன் தொலைபேசியில்
சொன்னபோது கடமை தவறாதவரின்
மகளைத்தான்
காதலித்திருக்கிறோம் என
இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து
மணிக்கெல்லாம் வ்ந்தமர்ந்த
உன் தகப்பனைப் பார்த்த போது
'எருமை மாட்டிற்கு மான்
குட்டி எப்படி பிறந்தது?!'
என்ற பழைய கவிதை தான்
நினைவிற்கு வந்தது.
மான்குட்டி என்ற வர்ணனை
உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது
உன் அப்பனுக்கு மிகக்
குறைந்த பட்சம்தான். அந்த
கடையில் பில் போடுவதற்காக
இருந்த கம்ப்யூட்டரைத் தவிர
மீதம் இருந்த அனைத்தையும்
தின்று தீர்த்துவிடும் வெறி
அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத்
தவறிவிட்டேன். சரி எதையாவது
சாப்பிட்டுவிட்டு பேச்சை
துவங்கலாம் என சர்வரை
அழைத்தேன். அதன் பின்
உன் அப்பனின்
கைங்கர்யத்தால் சமையலறைக்கும்
டேபிளிற்கும் இடையே
சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

ராயப்பாஸிலும்,
தலப்பாக்கட்டிலும், நீ புஃல்
கட்டு கட்டுவது உன் ஜெனிடிக்
பிரச்சனை என்பதைக்
கண்டுகொண்டேன்.
அவரது வேட்டையை முடிவுக்கு
கொண்டு வர இயலாதவனாக கையறு
நிலையில் இருந்த போது 'தம்பி
இப்பெல்லாம் முன்ன மாதிரி
சாப்பிட முடியறதில்லபா...
வயசாச்சில்ல..' என் தன்
திருவாய் மலர்ந்தார்.
திடப்பொருட்களிலிருந்து
ரோஸ்மில்க் பொன்ற திரவப்
பொருட்களுக்கு மாறினார்.
அப்பாடா, முடித்துவிட்டார்,
என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா'
என்ற வார்த்தையில்
உடைத்தார்.
'தம்பி எப்ப சாப்பிட்டாலும்
கடைசியா ஒரு ஐஸ் க்ரீம்
சாப்பிடுறது நல்லதுப்பா'
என்ற அவரது கூற்றில் இருந்த
கடைசியா எனும் வார்த்தைதான்
என் வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'சார், நான் உங்க பொண்ணை
விரும்புறேன்.அவளையே
கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமா
பேசத்தான் உங்களுக்கு போன்
பண்ணினேன்' என்று மல்ல
பேச்சை துவங்கினேன்.
'தம்பி ! இது பெரிய விஷயம்,
ஒரு நாள்ல
பேசித் தீர்த்துவிட
முடியாது.நீங்க ஒன்னு
பண்ணுங்க.. நாளைக்கு
சாயங்காலம் அன்னபூர்ணா
வந்திடுங்க... அங்க பேசிக்கலாம்' என்ற உனது
தகப்பனை கொலை செய்ய அந்த
நேரம் துப்பாக்கி
இல்லாமல் போனது
என் துர்பாக்கியமே.

காதலியின் பதிலடி
முட்டாள் காதலனே !
இத்தனை நாள் நீ
பேக்கு என்று எனக்கு
மட்டும் தான் தெரிந்திருந்தது.
அதை என் வீட்ட்ற்கும்
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே...
மான் குட்டியின் தந்தை
எப்படி எருமை மாடாகும்?
என் தந்தையும் கவரி மான் தான்...
உன்னை சந்திதது என் தந்தை அல்ல...
அடி முட்டளான உன்னை சோதிக்க
என் புத்திசாலி தந்தை
அனுப்பியது அவர் அலுவலக வேலைக்காரரை.....
காதலுக்கு தான் கண்ணில்லை....
உனக்குமா இல்லை....
யாரோ ஒருவனை என்
தந்தை என்று நம்பி உன்
பர்ஸை காலி செய்தாயே
என் பாசமிகு காதலா
என் தந்தையின் ஆசை
தனக்கு ஒரு புத்திசாலி
மருமகனாக வேன்டுமென்று...
என் தந்தைக்கும் வேறொருவனுக்கும்
வித்தியாசம் பார்க்க தெரியாத உன்னால்
வாழ்வில் நல்லது கெட்டது
பார்க்க தெரியாது
என்பது என் ததையின் எண்ணம்.
என் தந்தையின் தேர்வில்
தோற்றுவிட்டாயே ...
என் முட்டாள் காதலா...
இனியாவது பிறரை
நக்கலடிப்பதை விட்டு விட்டு
உன் பார்வையை மாற்று...
ஏதேதோ நிறைய வாங்கிகொடுத்து
எங்கள் வேலைக்காரரை
ஏமாத்திட்ட. அவரும்
உன்னை 'ரொம்ப நல்லவரு' ன்னு
சொல்லிட்டாருப்பா....
நாளையாவது என்
தந்தை வரும்போது இப்படி
பேக்கு மாதிரி இல்லாமல்
ஒழுங்காக நடந்து கொள்.
இல்லாவிட்டால், உன்னைக்
கொல்ல நான் துப்பாக்கி,
தேட வேண்டி இருக்கும்.

5.5.09

வரம் வாங்கி வந்தேன் - 2

சந்தானம் அலுவலகம் செல்ல தொடங்கினார். குடும்பம் ஓரளவு நல்ல நிலையை எட்டியது. இத்தனை நாள் வேண்டா வெறுப்பாக பழகிய உறவுக்காரர்கள். இப்பொழுது பாசத்துடன் பழகினர். இதற்கும் அந்த மூன்றாவது குழந்தையே போற்றப்பட்டது. ஒரு நாள் தனலக்ஷ்மி கற்பிணி என்பதை கண்ட குறி சொல்லும் பெண் காசுக்காக, அம்மணி சிங்ககுட்டி வரப் போறான், என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னாள். ஆத்திரம் கொண்ட தனலக்ஷ்மி பொறுக்காதவளாய், இங்க யாரும் உன் கிட்ட கேக்கல, வேற வீடு பாரு என்று கோபமாக சொன்னாள்.



சித்தி என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் மீனா. இவள் சந்தானத்தின் அண்ணன் மகள். இரு குடும்பத்திற்கும் பகை. காரணம், சந்தானத்தின் தாய் தங்கம்மாள். சில வருடங்களுக்கு முன்னர், கூட்டு குடும்பமாக தான் இருந்தனர். தனலக்ஷ்மி சற்று வறுமையான குடும்பத்து பெண் என்பதால், மூத்த மருமகளுக்கு அதிக உரிமைகள் கொடுத்தார், தங்கம்மாள். இதனால் தனலக்ஷ்மியின் மீதான கொடுமைகள் அதிகரித்தன. இதனை சந்தானம் பொறுக்க முடியாமல் தனி குடித்தனம் சென்றார். அத்துடன் இரு குடும்பங்களின் பேச்சு வார்த்தயும் நின்று விட்டது.தங்கம்மாள் சந்தானத்தின் வீட்டை மிதிப்பதில்லை என்று சபதம் செய்தார். இருப்பினும் மீனா மட்டும் தனலக்ஷ்மியின் மீதுள்ள பாசத்தினால் பேசுவாள்..



என்ன சித்தி சோகமா இருக்கீங்க என்றாள் மீனா. குறி சொல்லும் பெண் கூறியதை விவரித்தாள் தனலக்ஷ்மி. என்ன சித்தி, நீங்க வேணா பாருங்க தங்கச்சி பாப்ப்பா தான் பிறக்கும் என்று சவால் விட்டாள் மீனா. அதில் மகிழ்ந்தவளாய், அப்டி மட்டும் நடந்ததுனா உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தறேன் என்று உறுதி அளித்தாள் தனலக்ஷ்மி. பிரசவத்திற்கான நாட்கள் நெருங்கின.

சதீஷ்,சந்தோஷ் என்ற குரலுக்கு ஓடி வந்தனர். என்ன மா என்றான் சந்தோஷ், தனலக்ஷ்மியினுடைய மூத்த மகன். கெட்டிக்காரன்.இவன் செய்யும் குறும்புகளுக்கு அடி வாங்குவது சதீஷ் தான். சதீஷ் தனலக்ஷ்மியின் இரண்டாவது மகன். சுறுசுறுப்பானவன். சற்று கோபக்காரனும் கூட. அம்மா, அம்மாச்சி வீட்டுக்கு போறேன்.நீங்க ரெண்டு பேரும் அப்பாவுக்கு தொல்ல கொடுக்காம ஒத்தாசையா இருக்கனும். நல்லா படிங்க.சதீஷ் அழ தொடங்கினான். அழாத சதீஷ், அம்மா பாப்பாவோட வருவாங்க என்று பெருமையுடன் கூறினான் சந்தோஷ். அம்மா எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் என்றான் சந்தோஷ். பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தனக்கு அடுத்ததும் ஆண் குழந்தை தான் என்று நம்பினாள் தனம். ம்ம்ம்.. அப்பிடின்னா, சாமி எங்களுக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும்னு வேண்டிக்கோங்க.... அவள் சொன்ன மாத்திரத்தில் இருவரும் ஒரு சேர சாமி எங்களுக்கு தங்கச்சி பாப்பா குடு என்றனர். சிரித்துக்கொண்டே விடை பெற்றாள்.

பிரசவத்திற்காக மதுரையிலுள்ள தன் தாயின் வீட்டிற்கு வந்தாள் தனம்.பெண் குழந்தைக்காக அனைத்து தெய்வங்களிடமும் வேண்டினாள். இருப்பினும் ஆண் குழந்தை என்றாலும் பரவாயில்லை என்று தானே பக்குவப்பட்டாள். அம்மா வீட்டில் இருந்தாலும், எந்நேரமும் சதிஷ், சந்தோஷைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள்.அவங்களே தனியா எல்லா வேலையும் பாக்கணும் என்று சந்தானத்தை நினைத்து புலம்பிக்கொண்டே, ஆள் இருந்தும் ஒத்தாசைக்கு வரமாட்டேங்குராங்க என்று தன் மாமியாரையும் கடிந்து கொண்டாள். ஒரு நாள் கொட்டாய்க்கு(திரையரங்கம்) போய் வருஷமாச்சு. போலாம்மா என்று தன் அம்மாவையும், அண்ணியையும் அழைக்க, அவள் ஆசையை மறுக்க முடியாமல் மூவரும் திரையரங்கம் சென்றனர். பாதி படத்தினூடே அவள் வலியை உணரவே மூவரும் மருத்துவமனைக்க்கு விரைந்தனர்.மூன்று மனி நேரம் சென்று அழகான குழந்தை பிறந்தது. அந்த வலி மயக்கத்திலும் மருத்துவரிடம் என்ன குழந்தை என்று ஆர்வமாக கேட்டாள் தனம்.
தொடரும்...


வரம் வாங்கி வந்தேன் - 1

தனலக்ஷ்மி நான்கு மாத கற்பிணி.கணவர் சந்தானத்துக்கோ நிரந்தரமில்லாத தொழில்.ஏற்கனவே இரண்டு மகன்கள் வேறு.இவள் கற்பிணியாக இருக்கும் செய்தி உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்க்கும் தெரிய வந்தது. மூணு வேள சோத்துக்கே வழி இல்ல. இவளுக்கு மூணாவது புள்ள கேடா? என்று நேராகவும் மறைமுகமாகவும் இழிப்பேச்சு பேசினர். இன்னும் ஒரு படி அதிகம் போய் ஒரு சிலர், கன்னு குட்டி மாதிரி ரெண்டு ஆம்பள புள்ளைங்க வச்சிருக்க. பேசாம கலச்சிடு என்று அறிவுரை(!!!) கூறினர்.

இவர்களின் பேச்சுக்கு செவி மடுத்தவளாய், குழந்தை வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே மருத்துவமனை நோக்கி நடக்கிறாள். பல்வேறு மனப்போராட்டத்திற்குப் பின் வேண்டாம் என முடிவு செய்து மருத்துவரை சந்திக்கிறாள்.டாக்டரம்மா நாலு மாசமா முழுகாம இருக்கேன். ஏற்கனவே ரெண்டு பசங்க வேற.இந்த கருவ கலைச்சு விட்ருங்க என்று கண்ணில் நீர் ததும்ப கூறினாள். மருத்துவர் பரிசோதித்து விட்டு, இங்க பாரு தனலக்ஷ்மி குழந்தை நல்ல வளர்ச்சி-ல இருக்கு,இப்ப கருகலைப்பு பண்ணா உன் உயிருக்கு தான் ஆபத்து. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கருக்கலைப்பும் ஆபத்தான காரியமாக தான் இருந்தது.

மருத்துவர் மருத்துவிட்டதை அன்று இரவு சந்தானத்திடம் கூறினாள். எனக்கு என்ன ஆனாலும் பரவாலங்க.இப்ப நாம இருக்குற நெலமைல மூணாவது வேணாங்க என்று அழுத்தமாக கூறினாள். யார கேட்டு இப்டி முடிவு பண்ண? என் உடம்புல தெம்பு இருக்குர வரக்கும் என் புள்ளைங்களுக்கு நான் உழைப்பேன் டி.ஊர்ல யேசுனவுங்களா சோறு போட போறாங்க? .நீ இல்லாம என்னால இருக்க முடியுமா?நம்ம் பசங்கள பத்தி யோசிச்சியா? என்று சற்று கோபத்துடனே கூறினார் சந்தானம்.இப்ப ரெண்டு பசங்களுக்காக உழைக்கிறோம்.இனி மூணுக்கா உழைக்கலாம் என்று அவளை சமாதானம் செய்தார்.

தனலக்ஷ்மி, இன்னைக்கு பேங்க் கிளார்க் பரிட்ச.போய்ட்டு வரேன். நீ சாப்ட்டு தூங்கு. எனக்காக காத்திருக்காத என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார் சந்தானம். இப்ப என்ன பரிட்ச என்று ஒன்றும் புரியாதவளாய் தன் வேலைகளை தொடங்கினாள்.மூன்று மாதம் கழித்து வங்கி தேர்வு முடிவுகள் வெளி வந்தன. சந்தானமும் தேர்வாகி இருந்தார். அவர்கள் இருந்த அதே ஊரில் உள்ள ஒரு அரசு வங்கியில் அவருக்கு வேலையும் கிடைத்தது.இப்பொழுது ஏசிக்கப்பட்ட குழந்தை யோகமாக பேசப்ப்ட்டது. அனைவரும் உன் குழந்தை பெறக்குறதுக்கு முன்னாடியே அப்பாவுக்கு கவுர்மென்ட் உத்தியோகம் குடுத்துருக்கு. யோகக்காரப் புள்ள என்று அதே ஊரார் இன்று வாழ்த்தினர்.இதை மகிழ்ச்சியுடன் சந்தானத்திடம் கூறினாள் தனலக்ஷ்மி. அடி போடி இந்த வேலைக்கு எத்தன நாள் கண்ணு முழுச்சேன்னு எனக்கு தான் தெரியும்.யோகமாம் யோகம் என்று நக்கலடித்துக்கொண்டெ படுத்தார். இருந்தாலும் அவர் மனதிற்குள் நெகிழ்ச்சி.இத விட சின்ன வேலைக்கெல்லாம் முயற்சி பண்ணேன். அப்ப எல்லாம் வேல கிடைக்கல. சும்மா பரிட்ச்ச மட்டும் எழுத்ப்பாக்கலாம்னு இருந்தேன். வேல கிடைச்சுருச்சு. ஒரு வேள இந்த குழந்தயின் ராசியா இருக்குமோ? என்று யோசித்துக்கொண்டே தூங்கினார்.
தொடரும்...