24.7.09

முதல் மேடைப் பேச்சு

நான் ஒன்னாவதுல இருந்து அஞ்சாவது வரைக்கும் வீட்டு பக்கத்துல ஒரு சின்ன ஸ்கூல்ல படிச்சேன். அங்க என் அண்ண்ன் ரெண்டு பேரும் படிச்சதால எனக்கு ஸ்பெஷல் கவனிப்பா இருக்கும். எந்த ஃபங்ஷனா இருந்தாலும் என்ன மேடை ஏத்திடுவாங்க. அட பேச தாங்க.என்னோட முதல் மேடை பேச்சு பத்தி சொல்றேன் கேளுங்க. அப்ப சின்ன பொண்ணுங்க நானு. அஞ்சே அஞ்சு வயசு தான். ஒரு நாள் எங்க டீச்சர் க்ளாஸ் நடத்தும் போது பக்கத்து க்ளாஸ் டீச்சர் வந்து எங்க டீச்சர கூப்பிட்டு ஏதோ பேசிட்டு இருந்தாங்க. டீச்சர் இல்லாத தைரியத்துல நானும் பைக்குள்ள இருந்த மிட்டாய தூக்கி வாயில போட்டேன்.

திடீர்னு எங்க டீச்சர் வந்து, "குமாரோட தங்கச்சி, இங்க வா" அப்டின்னு சத்தமா கூப்டாங்க.ஐயோ.. மிட்டாய் சாப்பிட்டத பாத்துட்டாங்க போலன்னு நெனச்சுக்குட்டு, வாயில இருந்த மிட்டாய வேகமா சட்ட பாக்கெட்ல போட்டுட்டு பயந்துக்கிட்டே போனேன். என்னய கூட்டிட்டு போய் பெரிய க்ளாஸ் டீச்ச்ர் கிட்ட எல்லாம் இவ தான் இவ தான்னு காமிச்சாங்க. அப்புறம் நாளைக்கு உங்க அம்மாவ கூட்டிட்டு வான்னு அதட்டலா சொன்னாங்க. நான் அப்புடியே ஆடி போயிட்டேன். இத்துனூண்டு மிட்டாய் சாப்ட்டதுக்கு அம்மாவெல்லாம் வர சொல்லிட்டு. சின்ன ள்ள தனமா இல்ல.. க்ளாஸ்க்கு வந்ததும், பய புள்ளைங்க ஏதோ குத்தவாளிய பாக்குற மாதிரி பாத்துச்சுங்க...

பக்கத்து வீட்டு அம்முவும் என் க்ளாஸ் தான். நானும் அவளும் ஒன்னா தான் ஸ்கூலுக்கு போய்ட்டு வருவோம். எங்க அம்மா கிட்ட சொல்லாதன்னு அவளுக்கு நெல்லிக்காய் எல்லாம் வாங்கி குடுத்தேன். வீட்டுக்கு வந்த உடனே,"அத்த, ஸ்கூல்ல என்னாச்சு தெரியுமான்னு " அப்புடியே எல்லாத்தையும் ஒப்புச்சிட்டா. அது மட்டுமா... எங்க அம்மா இப்புடி யார் சொன்னாலும் நம்ம மாட்டாங்க. அப்புடி ஒரு நம்பிக்கை.ஆனா ஆதாரத்துக்கு சட்டைல வச்ச மிட்டாய் இருக்கே. வெள்ள சட்டைல ஆரஞ்சு கலர் ஒழுகி உவ்வ்வேவா இருந்துச்சு. அத பாத்ததும் எங்க அம்மாவுக்கு வந்த கோபத்த பாக்கணுமே. என்ன துவைச்சதுல, சட்டல இருந்த கறை காணாம போயிடுச்சு.

அடுத்த நாள் ஸ்கூலுக்கு அம்மாவும் வந்தாங்க. வர வழியெல்லாம் ஒரே திட்டு."ஆம்புள பிள்ளைங்களுக்கு கூட நான் ஒரு நாளும் போய் யார் முன்னாடியும் நின்னதுல்ல. பொட்டச்சி இப்டி பண்ண்ட்டளே" அப்புடின்னு ஒரே திட்டு. இந்த அம்முவுக்கு அப்புடி ஒரு சந்தோசம். வாழ்க்கையே வெறுத்து போய் ஸ்கூல் போனேன். அங்க நெறைய டீச்சர் இருந்தாங்க. அவங்க எல்லாருமே தெரிஞ்சவங்க தான். அதனால் என்னைய விட்டுட்டு, அம்மா மட்டும் போனாங்க...ஒரு பெரிய பேப்பர காமிச்சு அம்மாகிட்ட ஏதேதோ சொன்னாங்க. தம்மாத்துண்டு மிட்டாய்க்கு இவ்ளோ பெரிய குற்ற பத்திரிக்கையான்னு நொந்துட்டேன். பேசி முடிச்சிட்டு அம்மா வீட்டுக்கு வா பாத்துக்குறேன்னு போனாங்க.

சாயந்திரம் வீட்டுக்கு அடி வாங்க தயாரா போனேன். ஆனா வீட்டுல நடந்ததே வேற. காபி, ஸ்நாக்ஸ்னு ஓவர் உபசரிப்பா இருந்தது.அப்புறம் தான் அம்மா சொன்னாங்க ஸ்கூல் ஆண்டு விழால நான் பேசனுமாம். அத சொல்ல தான் அம்மாவ வர சொன்னாங்களாம். எனக்கு ஒரே பெருமை.நான் கூட சும்மா ஏதோ பேசுறதுக்கு இப்டி கவனிக்கிறாங்க.இப்டின்னா தினமும் ஸ்டேஜ்ல பேசலாம்முன்னு கனவுக்குதிரைய ஓட்டுனப்ப, டீச்சர் குடுத்த அந்த 4 பக்க பேப்பர அம்மா காமிச்சு, இத மனப்பாடம் பண்ணுமான்னாங்க.எனக்கு தலையே சுத்திடுச்சு.அப்ப தாங்க அ,ஆ வே எழுத கத்துக்கிட்டேன். என்கிட்ட போயி இப்புடில்லாம்...........

சரி நம்பள நம்பிட்டாங்க. செய்வோம்னு என்ன நானே தேத்திக்கிட்டேன்.அந்த நம்பிக்க தாங்க ஒரு மாச கிரஹமா என்னையே சுத்துச்சு...அடுத்த நாள் ஸ்கூல் போனதும் டீச்சர் பக்கத்துல நிக்க வச்சு ஒரு ஒரு பத்தியா வாசிக்க சொல்லிக்குடுத்தாங்க.கிரஹம் இப்ப தான் வேலைய காட்ட ஆரம்பிச்சிருக்கு .எப்டின்னா, லஞ்ச்-லயும் கேம்ஸ் பீரியட்லயும் எல்லாரும் விளையாடுவாங்க. நான் மட்டும் பாவமா டீச்சர் கூடவே இருப்பேன். 3 நாள்ல ஃபுல்லா பாத்து வாசிக்க கத்துக்கிட்டேன். அப்புறம் அந்த கிரஹம் என் மேலயே பெர்மனன்ட்டா ஒரு மாசத்துக்கு ஸ்டே பண்ணிடுச்சு...

அப்புறம் ஒரு ஒரு பத்தியா மனப்பாடம் பண்ண சொன்னாங்க. மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கும் போது தப்பா சொன்னா, இல்ல மறந்தா, எங்க டீச்சர் எப்புடி அடிப்பாங்க தெரியுமா. நான் எப்பவுமே டீச்சர விட்டு ஒரு ஸ்டெப் தள்ளி தான் நிப்பேன். ஏனா இந்த பொசிஷன் அடிக்க வசதியா இருக்காதுல்ல. ஆனா, ஆனா, டீச்ச்ர் என் சட்ட காலர இழுத்து அவங்களுக்கு வசதியா நிக்க வச்சு அறைவாங்க. நினச்சா இப்பவும் வலிக்குது.... அந்த சமயம் பாத்து எங்க அம்மா வருவாங்களா. அவங்கள பாத்து ரொம்ப அழுவேன்.அத பாத்துட்டு எங்க அம்மா உடனே டீச்சர் கிட்ட வேகமா வந்தாங்க. அடிக்காதிங்கன்னு சொல்லுவாங்கன்னு பாத்தா,"என்ன டீச்சர் இன்னுமா தப்பா சொல்றா? கரெக்ட்டா சொல்ற வரைக்கும் விடாதிங்கன்னு" சொன்னாங்க. எங்க அம்மா என் கண்ணுக்கு வில்லி நடிகை Y.விஜயா மாதிரி தெரிஞ்சாங்க.

ஸ்கூல்ல மட்டுமா? வீட்டுக்கு போனா அண்ணன்ங்க கிட்ட ஒப்பிக்கணும். அவங்க கிட்ட தப்பா சொன்னாலும் அடி விழும்.சரியா சொன்னாலும் ,"இப்புடி கரெக்ட்டா சொன்னீனா உன்ன எப்புடி அடிக்கிறது ... தப்பா சொல்லுன்னு "அடி விழும். அவங்கள முன்னாடி அப்பாகிட்ட அடி வாங்க வச்சத அந்த ஒரு மாசத்துல பழி தீர்த்துட்டாங்க.

அப்டியே ஒரு மாசம் போய்டுச்சு. நானும் நல்லா மனப்பாடம் பண்ணி, பேசவும் கத்துக்கிட்டேன்.இவ்ளோ சொன்னேன். எத பத்தி பேசுறென்னு சொல்லல பாருங்க. ஏனா நான் பேசுற வரைக்கும், ஏன் அதுக்கப்புறமும் தெரியாது. மூணாவது படிக்கும் போது தான் நான் பேசுனது காமராஜரப் பத்தின்னு எனக்கே தெரியும்.... இதுக்கு பேரு தான் "மொட்ட மனப்பாடம்". சரி அத விடுங்க...

அப்டி இப்டின்னு ஆண்டு விழா வந்துச்சு. காலைல தலைக்கு குளிப்பாட்டி, செம்ம மேக் அப். என் கைய விட பெரிய,அம்மாவோட வாட்ச்ச கட்டி விட்டாங்க. செயின், மோதிரம் எல்லாம் போட்டு அம்மா, அண்ணன்கள், பக்கத்து வீட்டு அக்காக்கள்,அண்ணன்கள் எல்லாரும் ஒரு கூட்டமா ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனாங்க. எனக்கு ஒரே சந்தோஷம்.

அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம் தான் நிலைச்சது. ஸ்டேஜ்
கிட்ட நின்னதும் கூட்டத்த பார்த்ததும் ஆடி போயிட்டேன். எங்க ஸ்கூல்ல இவ்ளோ பேர் படிக்கிறாங்கன்னு அப்ப தான் தெரியும். ப்ரொக்ராம் ஆரம்பிச்சது... கொஞ்ச நேரம் கழிச்சு ,"இப்பொழுது ஒன்றாம் வகுப்பு மாணவி பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி உரை ஆற்றுவாள்" அப்புடின்னு ஒரு வாய்ஸ். அப்ப கூட நான் தான் பேச போறேன்னு எனக்கு தெரில்ல..உடனே மைக் ஹைட்ட குறைச்சாங்க. என்ன ஸ்டேஜ்ல ஏத்தி விட்டு மெதுவா
காதுல ,"தைரியமா அது முன்னாடி நின்னு பேசுன்னு" டீச்சர் மைக்க காமிச்சு சொன்னாங்க.தைரியத்துக்காக அம்மா, அண்ணன்கள பாத்தேன். கண்ணுக்கு எட்டின தூரம் வர அவங்க இல்ல. அவங்கள பாத்தா சரியா பேச மாட்டேன்னு அவங்கள மறைச்சு வச்சுட்டாங்க..சரி போங்கடான்னு, மைக் முன்னாடி நின்னு ,"அனைவருக்கும் வணக்கம்" அப்புடின்னு சொன்ன நிமிஷம் , அங்கங்க "அனைவருக்கும் வணக்கம்" எகோ அடிச்சது. அத்தன ஸ்பீக்கர்.எனக்கு உலகமே இருண்டு போச்சு. அப்புடியே டீச்சர ஒரு லுக் விட்டேன்."ஒழுங்கா பேசு"ங்கற மாதிரி ஒரு மொற மொறச்சாங்க பாருங்க... பேசாம கீழ போனா அடி விழுமே.. அத நினச்சுக்கிட்டே ரெடி... ஜுட்... "இப்பொழுது நான் பேச எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு " அப்புடின்னு ஆரம்பிச்சு "அவர் நாமம்
போற்றுவோமாக. அனைவருக்கும் நன்றி" அப்புடின்னு முடிச்சதும்மே.... யாரோ வந்து தூக்கிட்டு போய்ட்டு எங்க க்ளாஸ்ல உக்கார வச்சாங்க.

டீச்சர் எல்லாரும் வந்து நல்லா பேசுனா அப்புடின்னு அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. எங்க அம்மா வந்து ட்ச்,செயின்,மோதிரம் எல்லாத்தையும் கழட்டிட்டு போய்ட்டாங்க."இவ்ளோ தான் உலகமா" அப்டின்னு வெறுத்து வீட்டுக்கு போனேன். வீட்டுல எனக்கு கிஃப்ட்டா அப்பா ஷு வாங்கி வச்சிருந்தாங்க. அப்புடி ஒரு சந்தோஷம்..... அப்ப ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சது..... எனக்கு அது ஒரு நல்ல அடித்தளமா இருந்தது... என்ன பேச வச்ச ஜோஸ்பின் டீச்சர், உக்குவிச்ச, அம்மா, அப்பா, அண்ணன் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறி இத்துடன் இத்துடன் இந்த உரையை முடித்துக் கொள்கிறென்.
நன்றி... வணக்கம்

5 comments:

நட்புடன் ஜமால் said...

என்ன துவைச்சதுல, சட்டல இருந்த கறை காணாம போயிடுச்சு.]]

ஹா ஹா ஹா


நல்ல இரசனையாக ஞாபகபடுத்தி சொல்லியிருக்கீங்க

தமிழ்ப்பிரியா said...

நன்றி ஜமால்.

வினோத் கெளதம் said...

ரொம்ப நல்லா எதார்த்தமா எழுதி இருக்கீங்க..

தமிழ்ப்பிரியா said...

நன்றி வினோத்கெளதம் ... தங்கள் முதல் வருகைக்கு....

SK said...

அப்பறம் மேடைல ஏறி பேசினீங்களா இல்லையா.. அத்தோட சரியா ??

Post a Comment